"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

blog post by karigan -must read

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Dec 24, 2015 10:35 pm    Post subject: blog post by karigan -must read Reply with quote

உணர்வு நரம்புகளை உரசும் உறவுமுறைகளின் உயிர்ப்பிசை என்றன்றைக்கும் ரசிக்கும் ஒரு மழலையின் சிரிப்பலை
இரவு வானில் ஒளிரும் ஒற்றை நட்சத்திரப் பிரகாசம்
இதயத்தை இனிமையாக இதமூட்டும் ஆலய ஒலி ரத்தத்தில் ஒன்றாகக் கலந்த கொள்கை கீதம்
காற்றில் மிதக்கும் சாயம் போகா சங்கீதம்
பெரு மழையிலும் கரையாத வானவில்
கவிதைகள் நெய்த இசைக்காவியம்
மனதை தைக்கும் நெருப்பு ஊசி
கசிந்துருகும் துயரத்தின் வலி
வண்ணம் வற்றா தூரிகை
கண்ணியக் காதல்சுவை
மொழியின் கண்ணாடி
இடைவிடா இன்பம்
இரவா இசையூற்று
ஜீவத் தென்றல்
சுடும் பனி










அலைகள் போல நம் மீது மோதும் வாழ்வின் வசந்தங்களும், வருத்தங்களும் நம் மனதில் ஆழத்தில் நினைவலைகளாக படிந்து மிச்சமிருக்க, அவற்றை சில நேரங்களில் ஒரு பாடல் எந்தவித முன் தயாரிப்புமின்றி ஒரே நொடியில் சட்டென உயிர்ப்பித்துவிடுகிறது. இசைக்கு மட்டுமே உள்ள இந்த அபூர்வ மாயத் தொடுகை சிந்தனைகளைத் தாண்டிய ஒரு கடவுள்தனம் கொண்டது. உறங்காத நினைவுகளின் இருப்பை அவ்வப்போது உறுதி செய்யும் இந்த இசை ஒரு நெருப்புத்துளி. ஒரு பொறி போதும். நினைவுகள் காட்டுத்தீ போல பரவி நம் நெஞ்சத்தை எரித்துவிடும். எத்தனை ஆனந்தங்கள், களிப்புகள், ஏகாந்தங்கள் , குதூகலங்கள், துயரங்கள், சோகங்கள், வலிகள், ஏமாற்றங்கள் இந்த இசைக்குள் விடுபடக் காத்திருக்கின்றன?

எழுபதுகளில் எங்கள் வீட்டில் தினந்தோறும் என் சகோதரிகளுக்கும் எங்களுக்கும் (என் அண்ணன் உட்பட) ஒரு இசைப் போர் நடக்கும். வானொலியில் நான் கேட்கும் பாடல்களை அவர்கள் ஒரு சொட்டு கூட மருந்து போல உள்வாங்கிக் கொண்டதில்லை. "இதெல்லாம் என்ன பாட்டு?" என்ற விமர்சனம் எப்போதும் அப்போதைய புதிய பாடல்கள் மீது அவர்கள் வைத்த முத்திரைக் குற்றச்சாட்டு. "சம்பந்தமில்லாத இசை. பாடல் ஒரு பக்கம். இசை இன்னொரு பக்கம்." என்று நான் லயித்துக் கேட்ட பாடல்கள் மீது கருணையில்லாமல் அவர்கள் ஆயிரம் லிட்டர் பெட்ரோல் ஊற்றுவார்கள். அதை கேட்கும் எனக்குத்தான் பற்றிக்கொண்டு எரியும். பழைய பாடல்கள் மீது அவர்களுக்கிருந்த இந்த ஈர்ப்பு என்னை மேன்மேலும் அவைகளை விட்டு விலகிச் செல்ல வைத்தது. "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலில் ஒரு குதிரை ஓசை வரும் பார்." என்பார்கள். "நீ கேட்கும் பாடலில் கழுதைதான் கத்துகிறது" என்ற பின்குறிப்பு கட்டாயம் உண்டு. கேட்கவே தேவையில்லை. "சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடல் கேட்க எத்தனை நன்றாக இருக்கும் தெரியுமா?" என்று என்னால் நினைவு படுத்திக்கொள்ள முடியாத ஒரு பாடலைக் குறிப்பிட்டு ஏற்கனவே எரியும் எனது நெருப்பில் இன்னொரு குவளை கெரஸின் கொட்டுவார்கள். நானோ என்னடி மீனாட்சி என்றிருப்பேன். கடந்து போன பாடல்களை திரும்பிப் பார்க்க விருப்பம் கொள்ளாத பருவத்தில் இது ஒரு நடக்கவேண்டிய அபத்தம். இப்போதுதான் அது தெரிகிறது. இந்த விபத்து எல்லோருக்கும் நேர்வதே.

பழைய பாடல்கள் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளே சிறைபட்டுப்போன கனவுலக இசை அனுபவங்கள் என்னைத் தீண்டியது எப்போது என்று ஒரு குறிப்பிட்ட நாளையோ பொழுதையோ என்னால் தீர்க்கமாக சொல்லவே முடியாது. பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயங்களில் என் நண்பர்களில் சிலர் இவ்வகையான பழைய பாடல்களைக் குறித்து சிலாகித்துப் பேசுவதை நான் கேலியுடன் உள்வாங்கியிருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், போனால் போகட்டும் போடா, சட்டி சுட்டதடா என்று என் பள்ளி நண்பர்கள் தத்துவமாக பாடும்போது என் தலை அசையும். நல்ல பாடல்கள்தான்...ஆனாலும் புதிய பாடல்கள் போல இல்லையே என்ற அவ்வயதுக்குரிய முதிர்ச்சியற்ற எண்ணம் என் உள்ளத்தில் உருவாகும். உண்மையில் எனது சிறு வயது நாட்களில் என் உணர்வுகளுக்கு உணவளித்தது இந்தப் பழைய இசையே. இவற்றில் எந்தப் பாடல் என்னை முதலில் கவர்ந்தது என்ற தகவல் என் நினைவடுக்குகளில் தேடியும் கிடைக்கவில்லை. அது அப்படித்தான். ஒரு வானவில் தோன்றும் அந்த ஆச்சர்யமான கணத்தை யாரால் படம் பிடிக்கமுடியும்? இருந்தும் ஆரம்பத்தில் நான் கேட்டு வளர்ந்த இசை ஆலயமான எம் எஸ் வி என்ற மகத்தான இசைஞரின் பாடல்களைவிட்டு இடையில் வெகு தொலைவு வந்து விட்டபின்னர் மீண்டும் ஏற்கனவே நான் பயணப்பட்ட சாலையைத் தெரிந்துகொண்டது பற்றி ஆராயத் தோன்றுகிறது. In a way, it's an introspection ----- with regret.

இது எம் எஸ் வியின் இசை ஆளுமை மற்றும் மேதமையை குறித்துப் பேசும் ஒரு இசை விமர்சனக் கட்டுரை இல்லை. அவர் இசையமைத்த படங்களை விவரிக்கும் ஒரு chronology ரகக் கட்டுரையும் அல்ல. அவரை உயர்த்திப் பிடிக்கும் நோக்கத்தில் தனிமனிதத் துதியாக எழுதப்படுவதும் அல்ல. பரவலாக பல தரப்பட்ட பாடல்களை விரும்பிக் கேட்கும் என்னை "தமிழில் உனக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்?" என யாராவது கேட்டால் ஒரு நொடி கூட தாமதிக்காமல் ஒரு அனிச்சை செயல் போல "எம்.எஸ்.வி." என்று சொல்லும் காரணத்தை விளக்கும் என் ஆத்மார்த்த எழுத்து. அவ்வளவே.

"அதோ அந்த பறவை போல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்" பள்ளிப் பருவத்தில் பழைய பாடல்கள் என்று காதில் என் விழுந்தாலே எனக்குத் தோன்றும் பல பாடல்களில் ஒன்று இது . இன்னும் கொஞ்சம் என் மூளையில் தேடிப்பார்த்தால் காட்டுக்குள்ளே திருவிழா, வந்த நாள் முதல் இந்த நாள் வரை போன்ற பல பாடல்களை எடுக்கலாம். இருந்தும் அதோ அந்த பறவை ஒரு தனிச் சிறப்பானதுதான். சுதந்திரம் பற்றிய சிந்தனை, மனதில் நிழலாடும் ஹம்மிங், துளிர்ப்பான இசை, நெஞ்சத்தில் ஒட்டிக்கொள்ளும் மெட்டு என எனக்குள் பொங்கி எழுந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக பின்னே நகர்ந்து சென்றால், நான் காலம் தெளிவில்லாத எதோ ஒரு நேரத்தில் கேட்ட அல்லது அடிக்கடிக் கேட்ட ஒரு பழைய பாடல் எம் எஸ் வி என்ற இசை ஆளுமையின் போக்கில் என்னை திசை திருப்புவதை உணர்கிறேன். அது நம் உறவு முறையை உன்னதப்படுத்தும் உணர்வின் இசை. அத்தையடி மெத்தையடி ஆடி விளையாடம்மா. ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா என்ற தாலாட்டுப் பாடல் எனக்குள் துயரம் தோய்ந்த இனிமைகளை புதிது புதிதாக உருவாக்கும் ஒவ்வொரு முறை கேட்கும்போதும். சுசீலாவின் குரல் மனதுக்கு நெருக்கமாக நமது குடும்ப உறுப்பினர் ஒருவரின் அன்னியோன்ய அரவணைப்பு போல ஆன்மாவை ஆழமாக ஊடுருவிச் சென்று ஒரு முத்தம் கொடுக்கும். அந்தப் பாடல் எனக்குள் ஏற்படுத்தும் காட்சிகளை விவரிப்பது சற்று இயலாத காரியம். இதே அனுபவம் உங்களுக்கும் எதோ ஒரு பாடலில் ஏற்பட்டிருக்கலாம். கனவுகளை விதைக்கும் அந்த இசையை மனதுக்குள் பூட்டிவைத்து அழகு பார்ப்பதே சில சமயங்களில் அழகுதான்.

எப்போது முதல் முறை என்று தெரியவில்லை. ஆனால் நூறு தடவைகளுக்கு மேலே சிறிய வயதில் கேட்ட அந்தப் பாடல் எப்போதும் கொஞ்சம் தென்றல், கொஞ்சம் பனிச் சாரல், கொஞ்சம் சோகக் காற்று, கொஞ்சம் கூரான கத்தி தரும் வலி என்று பலவித உணர்ச்சிகளை ஒரு சேர செலுத்திவிட்டுப் போகும். என்னைப் பொருத்தவரை தமிழில் வந்த மிகச் சிறந்த பாடல்கள் என நீங்கள் நூறு, ஐம்பது இருபது, பத்து ஏன் ஐந்து என்று பட்டியல் போட்டால்கூட கண்டிப்பாக இடம்பெறும் பாடல். இன்னும் நெருக்கி மூன்று என்று அந்தப் பட்டியலை நீங்கள் சுருக்கினாலும் இந்தப் பாடல் அங்கே இருக்கும். இதற்கு மேலும் நான் இந்தப் பட்டியல் குறித்துப் பேசினால் தமிழின் மிகச் சிறந்த பாடல் இதுதான் என்று நான் உணர்த்துவதாக நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அது எப்படி என்று பார்ப்போம். அதற்கு முன் கொஞ்சம் விஞ்ஞானத்தை தொட்டுக்கொள்வோம்.

1979 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா ஒரு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. அதன் பெயர் வாயேஜர். இந்த வாயேஜர் மற்ற நாசா விண்கலங்கள் போல ஒரு குறிப்பிட்ட பால்வெளிக் கோளத்தை அறியும் இன்னொரு ராக்கெட் கிடையாது. நிலவையோ சூரியனையோ ஆராயும் சந்திராயன் அல்லது இந்திராயன் போன்ற டிபிக்கல் ராக்கெட் இல்லை இது. இதன் நோக்கம் முற்றிலும் மாறுபட்டது. பூமி என்ற நமது உலகத்தின் முழுமையான வரலாற்றை பிற உயிரினங்கள் ---அறிவியல் மொழியில் வேற்றுகிரகவாசிகள் --- அறிந்துகொள்ளும் வகையில் இந்த வாயேஜர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாசா இந்த விண்கலத்தில் கோல்டன் டிஸ்க் என்றழைக்கப்படும் பெரிய இசைத் தட்டை , குறிப்பாக இரண்டு இசைத்தட்டுக்கள், இதில் பொருத்தி அனுப்பியுள்ளது. இந்த இசைத் தட்டுக்கள் நமது பூமியின் மில்லியன் வருட வரலாற்றை இசைத் துணுக்குக்களாகவும், காண்கிற காட்சியாகவும் பதிவு செய்யப்பட்ட தகவல்களைக் கொண்டவை.

கார்ல் சாகன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அஸ்ட்ரோ பிசிசிஸ்ட்ஸ் திடமாக நம்பும் வேற்றுகிரகவாசிகள் இந்த பிரபஞ்சத்தில் எங்காவது இருப்பின் அவர்கள் இந்த விண்கலத்தை அடையாளம் கண்டுகொண்டு அதன் தங்கத் தட்டை தங்களின் அறிவின் மூலம் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அந்த கோல்டன் டிஸ்க்ஸ் பல தகவல்களை டாட்ஸ் மற்றும் லைன்ஸ் எனப்படும் டிஜிடல் செய்திகளாக தனக்குள் அடக்கியவை. ஒவ்வொரு சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களும் இவற்றில் உண்டு. ஏறக்குறைய உலகின் அனைத்து மொழிகளிலும் ஒரு வார்த்தையும் , பலவிதமான பண்பாட்டுக் கூறுகளை விளக்கும் சிறிய காட்சிகளும் , அது தொடர்பான இசை வடிவங்களும் கொண்ட இந்த தங்கத்தட்டில் நமது தமிழ் சமூகத்தின் அடையாளமாக என்ன இருக்கிறது என்பது குறித்து தெரியவில்லை. வேண்டுமானால் வணக்கம் அல்லது தமிழ் என்ற சொற்கள் இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம். இப்போது அதுவல்ல பிரச்சினை.

ஆனால் தமிழ் இனத்தின் குறியீடாக ஒரு இசைத் துணுக்கை இதில் பொருத்த வேண்டுமானால் அந்த இசைத் துணுக்கு எதுவாக இருக்கும் என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஒரு நண்பரிடம் இது குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது அவர் "அச்சம் என்பது மடமையடா பாடலை சேர்க்கலாம்" என்று கூறினார். தமிழ் இன அடையாளமாக இந்தப் பாடல் சேர்க்கப்படுவதில் எந்த பிழையும் இல்லைதான். ஆனால் நான் வெறும் வீர எழுச்சியான இசையாக இல்லாமல் மனதை பிழியும் இசைத்துளியாக இருந்தால் அது மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது வெறும் கற்பனைதான். இருந்தும் இந்தக் கற்பனையை சற்று சிரத்தையுடன் கவனமாக செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குண்டு.

கேள்வி இதுதான்: ஒரே பாடல். அது நமது தமிழ் இனத்தின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் ஒரு சிறிய துணுக்கில் வடித்தெடுத்துவிடும் சுவை கொண்டதாக இருக்கவேண்டும். அது எந்தப் பாடல்? உங்களின் தேர்வு எதுவாக இருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். இந்தக் கற்பனை எத்தனை அற்புதமாக இருக்கிறது?

நமது தமிழ் சமூகத்தின் உயிர் நரம்பை ஒரே வரியில் மீட்டும் அந்த ஒரே ஒரு பாடல் என்னைப் பொறுத்தவரை பாசமலர் படத்தின் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடல்தான். உயிர் நரம்புகளை ஆழமான வலியுடன் மீட்டிச் சென்று, அந்த வலியின் வேதனையை ஒரு நெருப்புத் துண்டு போன்று நெஞ்சத்தில் அடைகாக்கும் வலிமையான துயரம் இந்தப் பாடல். பல்லவியில் வரும் நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே என்ற கவிதை மின்னல் கேட்பவருக்குள் செங்குத்தாக இறங்கி ஆயிரம் கண்ணீர்த் துளிகளை உருவாக்கும். வார்த்தைகளுக்குள் அடங்காத எதோ ஒரு சோகம் உடைந்த கண்ணடித் துண்டு போல மனதின் சுவர்களை கீறிச் சென்று துயரத்தின் ரத்தம் வழியச் செய்யும். வலியின் சுவையை மீண்டும் மீண்டும் ருசிக்க விரும்பும் ஆசையைத் தூண்டும் மெட்டும், கண்ணீர்க் கவிதை வரிகளும், சுகமான சோகத்தை பகிர்ந்துகொள்ளும் பாடகர்களின் உன்னதமான குரல்களும் ஒரு காவியம் பாடும். நமது வீட்டிற்குள்ளே பிணைந்திருக்கும் முதன்மையான உறவுமுறைகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல இதை விட்டால் வேறு என பாடல் இருக்க முடியும்?

இதே அலைவரிசையில் நீந்தும் மற்றொரு காவிய சோகம் குவிந்த கானம் பாக்கியலட்சுமி படத்தின் மிகப் பிரபலமான மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி பாடல். ஒவ்வொரு வரியும் பிரிவின் வேதனையை ஜன்னல் இடுக்குகள் வழியே வழியும் மழைத்துளி போல நெஞ்சத்துக்குள் செலுத்தும். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு சாதாரணமாக கடந்து செல்பவர்களின் இசை ரசனையை நாம் மிகத் தீவிரமாக எண்ணுவது முட்டாள்தனம் என்று நான் எண்ணுகிறேன். அதுபோன்ற இசை சூனியங்களின் விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு பதில் சொல்வதில்லை. காரணம் இருக்கிறது. ஒருமுறை என் நண்பன் ஒருவனுடன் இசை பற்றிய விவாதத்தின் கடுமையான உஷ்ணத்தில்," மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற பாடல் போன்று இன்னொரு பாடலை எனக்குச் சொல்." என்றேன். "என்ன பெரிய பாடல்? எம் எஸ் வி போட்ட பாடல்களிலேயே நினைத்தாலே இனிக்கும் பாடல்கள்தான் சிறந்தவை" என்றான் அவன் சிறிதும் அசராமல். நினைத்தாலே இனிக்கும் படப் பாடல்கள் சந்தேகமில்லாமல் சிறந்தவைதான். ஆனால் அதுதான் எம் எஸ் வி யின் உச்சம் என்பதை நான் என்றுமே ஏற்றுக்கொள்வதில்லை. அதுவாவது பரவாயில்லை. அதன் பிறகு அவன் தனக்குப் பிடித்த பாடலாக ஒன்றைக் குறிப்பிட்டு ,"அடடா! என்ன ஒரு பாடல் அது!" என்று ஆரம்பித்து அதை இசை அமைத்தவரின் பெயரைச் சொல்லி வழக்கமா
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Dec 24, 2015 10:44 pm    Post subject: Reply with quote

அவரது அடிவருடிகள் சிலாகிக்கும் ஒரு கோஷ்டி கானத்தை பாடிவிட்டு ,"உனக்குப் பிடிக்காதா?" என்றான். குமட்டிக்கொண்டு வந்தது. "போய் அதே ரகத்தில் உன் ஆள் எக்கச் சக்கமான சக்கைப் பாடல்கள் போட்டிருக்கிறார். அவைகளைக் கேள். உன் ரசனைக்கு அதுதான் சரி." என்றேன். என் எக்ஸ்ட்ரீம் எதிர்வினைக்கான அவன் குறிப்பிட்ட பாடல் மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே. இவ்வகையான ரசிப்புத் தன்மை ஒருவரின் தனிப்பட்ட டி என் ஏ சம்பந்தப்பட்டது. எந்தவித கிருமிநாசினி கொண்டும் இந்த அழுக்கான ரசனையை கழுவித் துடைத்தெடுத்துவிட முடியாது என்றாலும், சில இணைகோடுகள் ஒரு அபாரத்தை சில மகா கேவலமான அசிங்கத்துடன் இணைத்துவிடுவதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்.

என்னுடைய பால்ய வயதில், வானொலி என்ற ஒரு சதுரப் பெட்டி சமூகத்தின் மிக முக்கியமான பொழுதுபோக்கு சாதனமாக இருந்த காலங்களில் படம், பாடகர்கள், இசையமைத்தவர், பாடலாசிரியர் என்ற எந்த பெயரும் தெரியாமல் நான் கேட்ட பல பாடல்கள் மோகனச் சாரல்களை என் மீது சிதற அடித்திருக்கின்றன. என் மனதில் கவிதைகளை எழுதிச் சென்றிருக்கின்றன. பல குழந்தைப் பருவ நிகழ்சிகளை நினைவுகளாக என் நெஞ்சத்தில் படிவெடுத்திருக்கின்றன. கனவுகளால் என்னைப் போர்த்தியிருக்கின்றன. என் மூளையின் நியூரான்களில் அந்தப் பாடல்கள் துளித் துளி அமிலங்களாக பதிந்திருக்கின்றன. தேடியும் கிடைக்காமல் பின்னர் திடீரென்று ஒரு நாள் எதிர்பாரா வேளையில் ஒரு தென்றல் போல என்னை நாடி வந்திருக்கின்றன. இசையை வெறுமனே எங்களைப் போன்றவர்கள் கேட்கவில்லை. ஒரு காதில் பாடலும் மற்றொரு காதில் உலக இரைச்சலுமாக நாங்கள் இசையை ரசிக்கவில்லை. ஒரு வரியைக் கேட்டுவிட்டு உடனே அடுத்த பாடல் நோக்கி நகரும் இன்றைய வைஃபை வேகமும் எங்களிடமிருந்ததில்லை. மாறாக இசையை நாங்கள் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு களிப்பான, துயரமான, இனிமையான, கசப்பான, அமைதியான, ஆர்ப்பாட்டமான, குதூகலமான, வேதனையான, தனிமையான, முதிர்ச்சியான, பைத்தியக்காரத்தனமான நிகழ்வுகளோடும் பின்னிப் பிணைந்த வாழ்வியலின் மற்றொரு பரிமாணமாகவே உள்வாங்கி ரசித்தோம். நீரோடும், உணவோடும் ஒரு சேர அந்த இசையை சுவைத்தோம். பிராணவாயுவுடன் இசையையும் சேர்த்தே சுவாசித்தோம். இசையின் இழைகளை எங்கள் புன்னகைகளும், கண்ணீர்த்துளிகளும், அச்சங்களும், ஆச்சர்யங்களும், ஆனந்தங்களும், அழுகைகளும் பகிர்ந்துகொண்டன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு கதை சொல்லும் ஆழமான அர்த்தம் கொண்டிருக்கின்றன. இசை எங்களைப் போன்றவர்களுக்கு வெறும் பொழுதுபோக்கு இல்லை, அலுப்பான கணங்களை நிரப்பும் வெறும் கால நகர்ப்பும் அல்ல. அந்தப் பாடல்கள் அனைத்தும் எங்கள் வாழ்வின் பொன்னான தருணங்கள். அவைகளே இன்று மீண்டும் வாழ முடியாத என் கடந்த காலத்தை ஒரு வலியுடன் சுவைக்கும் வினோத விருந்து படைக்கின்றன.

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா என்ற பாடல் ஒலிக்கும் சமயங்களில் வீடே சற்று அமைதியாகிவிடும். ஒரு குளிர் காற்று என் மீது மோதி விட்டுச் செல்லும். சுசீலாவின் குரல் செல்லும் ஏற்ற இறக்கங்கள் வியப்பை விதைக்கும். என்ன என்ன வார்த்தைகளோ, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, சொன்னது நீதானா சொல் போன்ற பாடல்களும் இதே திகைப்பை எனக்குள் திணிக்கும். ஏன் இப்படி என்ற விடை தெரியாத கேள்வி பல வருடங்கள் கழித்து எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது.

பாடல் என்பது கவிதை கொண்ட இசை. (இங்கே நாம் வெறும் இசை என்ற இன்ஸ்ட்ரூமெண்டல் பாடல்களைப் பற்றி விவாதிக்கவேண்டாம். அவை வேறு தளத்தில், வேறு நகர்வில் செல்பவை.) புனையப்பட்ட ஒரு கவிதையை ஒரு இசைக் கோட்டின் மீது மென்மையாக உட்காரவைப்பது மெட்டு என்னும் சாகசம். அடுத்த நிலையாக காற்றில் கலந்து, கரைந்து உயிர்கொண்டு உலவும் இசையை தன் கற்பனையில் தேடிப் பிடித்து, அந்தக் காற்றை வார்த்தைகளுக்குள் ஒரு இசைஞன் சுவாசமாக செலுத்தும்போது கவிதையும், மெட்டும், குரலும், இசையும் சேர்ந்து ஒரு பாடலாக உயிர்பெற்று எழுகிறது. இருந்தும் இந்த மாயாஜாலம் ஏறக்குறைய அனைத்துப் பாடல்களிலும் சாதராணமாக நடைபெறும் இயல்பான ஒன்றுதான். ஆனால் ஏன் நம் மனம் ஒரு சில பாடல்களை நோக்கியே திரும்புகிறது என்பதற்கு மிக மையமான காரணம் ஒன்று இருக்கிறது.

ஒரு முறை தேநீர்க் கடையொன்றில் எப் எம் வானொலியில் ஒலித்த நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே என்ற பாடலை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். கூட இருந்த என் நண்பரோ என்னைக் கிளம்பும்படி அவசரப்படுத்தினார். "பொறுங்கள். இந்தப் பாடல் முடியட்டும்." என்றேன். கொஞ்சம் விநோதமாக என்னைப் பார்த்து, "அப்படி என்னதான் இந்தப் பழைய பாடலில் இருக்கிறதோ?" என்றார் கேலியுடன். "இசை கூட இதிலில்லை." என்றார் அந்தக் கேலியின் நீட்சியாக. நான் பாடல் முடியும் வரை பேசவில்லை. அதன் பின், "நீங்கள் சொன்னபடி அந்தப் பாடலில் இசை இல்லாமலில்லை. நீங்கள்தான் கவனிக்கவில்லை." என்றேன். "ஒரு வாத்திய ஓசை கூட எனக்குக் கேட்கவில்லை. எதை இசை என்று சொல்கிறீர்கள்?" என்றார் அவர். கொஞ்ச நேர தேவையான அமைதிக்குப் பிறகு நான் சொன்னேன்: "அந்தப் பாடலின் மெட்டுதான் அதன் இசை." அவருக்கு இது குழப்பமாக இருந்தது போலும். என்னிடம் மேற்கொண்டு அவர் எதுவும் கேட்கவில்லை. கேட்டால் இதைவிட இன்னும் அதிகமாக குழம்பிப் போய்விடுவோம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் நான் சொல்ல வருவது இதுதான்: வாத்தியக் கருவிகளின் ஓசையை இசை என புரிந்துகொள்வது ஒரு பொதுவான கருத்தோட்டம். ஆனால் சில இசை வடிவங்களுக்கு வாத்தியங்களின் துணையே தேவையிருக்காது. வாத்தியங்கள் இரண்டாம் பட்சம்தான். என்னுடைய வார்த்தைகள் அவருக்குப் புரிந்ததா என்று தெரியவில்லை. அதைப் பற்றி நான் அக்கறையும் கொள்ளவில்லை. ஆனால் எனது புரிதல் எண்ணிலடங்கா அபூர்வ ராகங்களை அனாசயமாக தன் விரல்களுக்குள் அடைத்துவைத்திருந்த எம் எஸ் வி என்ற அதிசயமானவரை நோக்கி என்னை நகர்த்தியதன் வெளிப்பாடு.

எம் எஸ் வியின் மரணிக்காத, மகத்தான பாடல்களை அருகே கூர்ந்து நோக்கினால், புலப்படும் உண்மை இதுதான். அவரது பிரதான இசை அல்லது அவர் பாடல்களின் முதன்மையான இசை எதுவென்று பார்த்தால், அது அவர் மீட்டிய வாத்தியக்கருவிகளிலிருந்து வருவதில்லை. மாறாக அவர் அமைத்த மெட்டுக்களே அந்த இசையாக இருக்கிறது. இன்று நம்மால் மறக்க முடியாத அவரது பல பாடல்களின் முகவரி அவ்வாறான இசை மெட்டுக்கள்தான். அவர் அமைத்த வாத்தியங்களின் இசையமைப்பு இரண்டாம் இடத்தில் நிற்க, அவரின் மெட்டுக்களே இசையாக நம்மில் நிலைத்திருக்கின்றன. அந்த அற்புத மெட்டுக்குள் சுகமாக சவாரி செய்யும் குரல்கள் உற்சாக உச்சங்களுக்கும், கற்பனையே செய்ய இயலாத திடீர் ராக வளைவுகளுக்கும், சட்டென்ற இனிமைகளுக்கும், திகட்டாத திகைப்புகளுக்கும், லயிக்கச் செய்யும் லாவகங்களுக்கும், துயில் துறக்க ஏதுவான துயரங்களுக்கும் இடையே மாறி மாறிச் சென்று, அங்கே ஏறி, இங்கே இறங்கி, மீண்டும் ஒய்யாரமாகத் திரும்பி, அங்கங்கே கொஞ்சம் நின்று கனவுகளை உருவாக்கும். மெட்டு என்ற அவருடைய அந்த அபாரமான இசைக் கூட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் எந்த மனிதக் குரலும் அந்த மெட்டின் ஈர்ப்பில் கேட்பவரை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் தன்னையே மாற்றிக்கொள்ளும்.

எம் எஸ் வியின் பல பாடல்களை இந்தக் கருத்துக்காக என்னால் அழைத்து வர முடிந்தாலும் ஒரு சிலவற்றை மட்டும் ஆராய்வோம். கீழேயுள்ள பாடல்களைப் பாருங்கள். கொஞ்சம் அந்தப் பாடல்களை உங்கள் மனதிலிருந்து உதட்டுக்கு வரவழையுங்கள். நான் சொல்லும் உண்மையை உணர்வீர்கள்.

கட்டோடு குழலாட ஆட கண்ணென்ற மீனாட ஆட - இந்தப் பாடல் ஒன்றே போதும் நான் மேலே சொல்லியுள்ள மெட்டே ஒரு இசை என்ற கருத்தை கட்டமைக்க. பாடகர்களின் குரல்கள் எத்தனை இனிமையாக வளைந்து, நெளிந்து சென்று , வாத்தியங்களின் இசையை இலகுவாக சமன் செய்துவிடுகின்றன என்று பாருங்கள். அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் மிக மெல்லிய மெல்லிசையாக பின்னணியில் இசைக்கருவிகள் தங்களது தேவையின்மையை உணர்ந்ததைப் போல அடங்கி ஒலிக்க, பாடல் முழுவதையும் குரல்களே இசைக்கின்றன. மேலும் கூடவே வரும் ஹம்மிங் மற்றொரு மகுடம் சூட்டுகிறது.

நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே - ஆன்மாவை சற்று அசைத்துப் பார்க்கும் அற்புதமான மெட்டு. இந்தப் பாடல் முழுவதையும் முதலில் வெறும் விசிலோசை, ஹம்மிங் கொண்டே அமைப்பதாக எம் எஸ் வி- டி கே ஆர் தீர்மானித்திருக்க, மெட்டைக் கேட்ட கண்ணதாசன் பிடிவாதமாக இந்த அபாரமான மெட்டுக்குப் பாட்டு எழுதியே தீருவேன் என்று சொல்ல, அதன் பின்னரே பாடலில் வரிகள் வந்து உட்கார்ந்தன என்று ஒரு தகவல் உண்டு.

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா - முதல் வரியே மனதுக்குள் ஒரு இசைத் தட்டை சுழல விடுகிறது. சுசீலாவின் குரலில்தான் நம் மனதை கரைக்கும் சோகம் எப்படி ஒரு நளினமான அழகோடு வெளிப்படுகிறது? நான் முதன் முதலாக கேட்ட எம் எஸ் வி பாடல்களில் இதுவும் ஒன்று. அடிக்கடி வானொலிக் காற்றில் மிதந்த இந்த இசை பழைய பாடல்கள் குறித்த எனது பார்வையை சீரமைத்த பலவற்றில் ஒன்று.

அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்- சுசீலா ராஜாங்கம் நடத்திய பாடல்களில் ஒன்று. சுசீலாவின் குரலிசை கொஞ்சமும் பிசிறில்லாமல் வெவ்வேறு தளங்களில் ஏறி இறங்கி நளினமாக நடைபயின்று ஆச்சர்யம் அளிக்கும் பாடல். எம் எஸ் வியின் மெட்டில் ரகசியமாக மறைந்திருக்கும் வசீகரங்கள் சுசீலாவின் குரலில் உயிர் பெற்று ஒலிக்கும். குறிப்பாக பல்லவியில் நீராடும் மேலாடை நெஞ்சை மெல்ல மூடும், கை தேடி கை தேடி கன்னம் கொஞ்சம் வாடும் என்ற இடத்தில் அவரது குரல் காட்டும் ஜாலங்கள் அபாரமானவை. அதே போல சரணம் முடியும் இடங்களில் அவர் அம்மம்மாஆஆஆ என்று நீட்டிக்கும்போது, அந்தக் குரல் உள்ளே சென்று ஒரு பிரம்மிப்பை அழைத்துக்கொண்டு வரும். கேட்கும் போது மனதில் விவரிக்க முடியாத எதோ ஒன்று சற்று புரண்டு படுக்கும். எந்தவித டெக்னாலஜி ஜிகினாவும் பூசப்படாத உண்மையான குரலிசை. உயர்ந்த கற்பனையில் உருவான ஒரு கானக்கனவு.

கொடியசைந்ததும் காற்று வந்ததா? பாடலை எண்ணினாலே அந்த மெட்டு எத்தனை அழகாக நம்மை ஆட்கொள்கிறது? இந்த மெட்டுக்குள் புகுந்து கொள்ளும் காவியக் காதல் வரிகள் எப்படி மக்கள் மனதிலிருந்து மறக்கப்படும்? காலங்கள் பல கழிந்தாலும் இது போன்ற காவியங்கள் நிலைத்திருக்குமே ஒழிய கடந்து போவதில்லை.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி - துயர தூரிகையை சோகத்தில் நனைத்தெடுத்து வேதனையின் வண்ணத்தை குழைத்து, பிரிவின் வலியை வரைந்த பாடல். சுசீலாவின் குரல் இல்லாவிட்டால் ஒரே நொடியில் இது இறந்துவிடும். அல்லது இந்த மெட்டு இல்லாவிட்டால் சுசீலாவின் குரல் இனிமை இழந்துவிடும். காவியக் கலப்பு. மனதின் வேர்களுக்குள் ஒரு நெருப்புக் கத்திபோல குத்திக் கிழித்துச் சென்று ..... தகிக்கும் கானம்.

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா - சுசீலாவுக்கு தேசிய விருது கிடைத்த பாடல் என்பதில் வியப்பே இல்லை. சாஸ்திரிய ராகங்களுக்குள் எம் எஸ் வி தேடி எடுத்த வானவில். இசையாகவே மாறிவிடும் சுசீலாவின் தேன் குரல் இந்த மெல்லிசை மெட்டின் மீது மற்றொரு ஓவியம் வரைகிறது. பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய் என்ற prelude முடிந்த பின் இசையாகவே எழும் அவர் குரல் எவ்வாறு தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு என மெழுகாய் உருகுகிறது என்று பாருங்கள். காலத்தால் கரைக்க முடியாத பாடல்.

சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே - துயரத்தைக் கூட விரும்பிக் கேட்க வைக்கும் மின்சார துக்கம். சரணங்களில் வாத்தியக் கருவிகளின் இசையுடன் சுசீலாவின் குரல் நடத்தும் போர் வியப்பான சுவை கொண்டது. கண்ணீர்த் துளிகளில் புரண்டு எழுந்த மெட்டு. பாடல் சரணத்துக்குள் பயணிக்கும் போது ஆயிரம் மின்னல்கள் அடிக்கும். நமது சோக நரம்பை கண்டுபிடித்து அதை மீட்டிவிட்டுப் போகும் இசை. இது ஒரு அமைதியான ஆனந்த அழுகை.

தமிழுக்கும் அமுதென்று பேர்- என்ன இசைக் கருவி இசைக்கப்பட்டது என்ற விபரங்கள் தேவைப்படாத கேட்பவர்களின் நெஞ்சங்களில் தமிழை சிறப்பு செய்யும் இசையாக உறைந்து விட்ட பாடல். இப்படியான மெட்டை தன் கற்பனையில் கண்டுபிடித்தவரின் மேதமையை என்னவென்று விவரிப்பது?

நினைக்கத் தெரிந்த மனமே- காதலின் பிரிவை உணர்த்தும் முதன்மையான பாடல். பலர் விரும்பும், குறிப்பாக பாட விரும்பும் சோக இழைகளை வைத்துத் தைத்த கண்ணீர் வலி. பலரின் மனதிலும் உதட்டிலும் உட்கார்ந்திருக்கும் உணர்ச்சிமயமான பாடல். மெட்டின் இசையே இந்தப் பாடலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிறது. வாத்தியங்கள் கூடவே வருகின்றன. எம் எஸ் வி யின் மெட்டுகள் செய்யும் இந்த விசித்திர வித்தை ஒரு வசியம் போன்று நம்மை ஆட்கொள்கிறது.

அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான்- சற்று பிசகினாலும் விரச சகதியில் விழுந்து அசிங்கப்பட்டுப்போகும் பாடல். மிக மெல்லிய நூலிலையின் மீது சாதுர்யமாக நடந்து சென்று எம் எஸ் வி கொடுத்த விரக தாப ஆனால் அதேசமயம் கண்ணியம் மிகுந்த காதல் கானம் இது. என் நண்பன் இதையே விரசம் என்று சொல்லுவான், எம் எஸ் வியின் இசையில் விரசம் உண்டா என்ற என்னுடைய நீண்ட நாள் கேள்விக்கு கண்டிப்பாக இல்லை என்ற பதில் கிடைத்த பின்னே நான் மீண்டும் ஆழமாக இதைக் கĭ
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Dec 24, 2015 10:49 pm    Post subject: Reply with quote

கேட்டபோது இந்தப் பாடலின் பலவித பரிமாணம் என் மூளைக்குள் சென்று என் சந்தேக எண்ணத்தை துவம்சம் செய்தது. இன்றும் பல பெண்கள் தயக்கமில்லாமல், எந்தவித பாசாங்கும் இல்லாமல் பொதுவில் ரசிக்கும் பாடல். ரசிப்பதென்ன பலர் வாய்விட்டுப் பாடும் அற்புதமான பாடலிது. இதே பாடலை எம் எஸ் விக்குப் பிறகு வந்த "மற்றவர்கள்" அமைத்திருந்தால் .. முன்னிசை இடையிசை பின்னிசை என்று பலவிதமாக பலவித இயற்கையான "வாழ்வியல் ஓசைகளை" அமைத்து பின்னி எடுத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. பாவம். எம் எஸ் விக்கு "அந்த அளவுக்கு இசை ஞானம்" இல்லை.

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே லதா மங்கேஷ்கரை இந்தியாவின் நைடிங்கேல் என்றழைப்பதுண்டு. எனது விழியில் சுசீலா அவரை எப்போதோ ஓரம் கட்டிச் சென்றுவிட்டார். ஒரு உதாரணம் இந்தப் பாடல். அருவி போன்று சுசீலாவின் குரல் விழுந்து ஒரு புகை போன்று அடுத்த நொடியே எழுவது ஒரு மாயாஜாலம். எம் எஸ் வி மெட்டுக்குள்ளே மெட்டுக்கள் அமைப்பதில் இயல்பான திறமை கொண்டவர். இந்தப் பாடலில் அதை நீங்கள் வெகுவாக உணரலாம். பல்லவியின் மூன்றாவது வரியிலேயே மெட்டு மாறும். சரணத்தில் கேட்கவே வேண்டாம். இசை வடகிழக்கு பருவ மழை போல நிற்காது கொட்டும். மெட்டுகளை சாமர்த்தியமாக வளைப்பதில் தான் ஒரு வல்லவர் என்பதை எம் எஸ் வி நிரூபித்த மற்றொரு மரணமில்லா கானம். பாடல் மொத்தமும் சுசீலாவின் இசை ராஜ்ஜியம் ரம்மியமாக நடைபோடும். என்னால் விவரிக்க முடியாத எதோ ஒரு மர்மமான வசீகரம் இதில் இருப்பதை நான் உணர்ந்தே இருந்தேன். அது என்னவென்பதை நீண்ட வருடங்கள் கழித்துத்தான் அறிந்துகொள்ள முடிந்தது. கீழே இருப்பது திரு முரளி ஸ்ரீநிவாஸ் என்பவர் எம் எஸ் வி பற்றிய திரெட் ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. படித்ததும் நான் உணர்ந்தது சரிதான் என்று தோன்றியது. இதோ உங்கள் பார்வைக்கு:

தாயன்பன் எடுத்துக் கொண்ட பாடல் புதிய பறவையில் சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே பாடல். தன் மனதில் இருக்கும் காதலை காதலனிடம் வெளிப்படுத்த நினைக்கிறாள் அந்தப் பெண். நேரிடையாக சொல்ல முடியாமல் அதற்கு ஒரு உருவம் கொடுக்க முயற்சிக்கிறாள். அதாவது ஆங்கிலத்தில் metaphor என சொல்லபடும் வகையை சார்ந்து தன்னை ஒரு சிட்டுக் குருவியாக கற்பனை செய்துக் கொள்கிறாள்.

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே
என்பது பல்லவி.

சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து தன் இணையோடு சேர்வதும் செவ்வானம் மாலையில் கடலில் கலப்பதும் மலரினில் வண்டு மூழ்குவதும் மூங்கிலில் காற்று சேர்வதும் எவ்வளவு இயற்கையோ அதே போன்றதுதான் என் மனதில் உன் மேல் உள்ள காதல் என்கிறாள் காதலி. இந்த பல்லவியில் கவிஞர் ஸ்கோர் செய்கிறார் என்றால் சரணத்தில் மெல்லிசை மன்னர் கொடி நாட்டுகிறார் என்றார் தாயன்பன்,

எப்படி என்றால் இடம் பொருள் ஏவல் எதையும் பாராமல் எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி தன் ஆசையை விருப்பத்தை வெளிப்படுத்துகிறது நிறைவேற்றிக் கொள்கிறது சிட்டுக் குருவி. அதே போன்று சுதந்திரமாக தன் மன வானில் பறக்க நினைக்கிறாள் அந்த பெண். அதை குறிக்கும் விதமாக சரணம் தொடங்கும் முன்பு ஒரு ஹம்மிங்கை புகுத்துகிறார் எம்எஸ்வி. அஹா அஹா அஹா ஆஹா என்ற அந்த ஹம்மிங் அந்த பறவையின் மனநிலையில் அந்த பெண் இருக்கிறாள் என்பதை உணர்த்துகிறது.

ஆனால் என்னதான் தன்னை பறவையாக கற்பனை செய்துக் கொண்டாலும் யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதே. பறவையைப் போல் சுதந்திர வானில் பார்க்க முடியாதே. அந்த விருப்பம் ஏக்கமாக முடிவதை எம்எஸ்வி எப்படி கொண்டு வந்திருக்கிறார்?

பறந்து செல்ல நினைத்திருந்தேன் என்ற தன் ஆசை எப்படி முடியாமல் போகிறது என்பதை

பறந்து செல்ல நினைத்திருந்தேன் எனக்கும் சிறகில்லையே என்கிறாள். இங்கே பறந்து செல்ல என்ற வார்த்தைகள் மேலே போய்விட்டு எனக்கோர் சிறகில்லையே எனும்போது அந்த குரலே கீழே இறங்குகிறது. சரணத்தில் வரும் வரிகளையே இரண்டாக பிரித்து ஒவ்வொரு வரியிலும் முதல் பகுதியில் இடம் பெறும் ஆசை விருப்பம் இவற்றை மேல்ஸ்தாயில் வருவது போன்றும் அதே நேரத்தில் அந்த ஆசை அல்லது விருப்பம் நடக்காது என்ற யதார்த்தம் மனசில் உறைக்க அந்த வரியின் இரண்டாம் பகுதியை கீழ்ஸ்தாயிலும் அமைத்திருப்பார் எம்எஸ்வி என்று சொல்லி அந்த சரணத்தின் வரிகளை அதே போல் பிரித்து பாடிக் காட்டினார் தாயன்பன்.

பறந்து செல்ல நினைத்து விட்டேன் - எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் - பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் - வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் - நாணம் விடவில்லையே

மொத்த அரங்கமும் கைதட்டியது. கவியரசர் மெல்லிசை மன்னர் இசையரசி கூட்டணியின் மேதமைக்கு மட்டுமின்றி அதை அழகாய் திறானய்வு செய்த தாயன்பனுக்கும் சேர்த்துதான்.

நானும் கொஞ்சம் கைதட்டிவிட்டு வருகிறேன்.

பல்லவிக்கு மட்டும் தானானா தானானா என்று எதோ ஒரு மெட்டு அமைத்துவிட்டு சரணத்தில் பாடகர்களை பேசவைத்து அதற்கு பின்னணியில் 12 நொடிக்கு ஒரு குழல், 4.5 நொடிக்கு ஒரு வயலின், 10.3 நொடிக்கு ஒரு கிடார் என்று சம்பந்தம் இல்லாமல் தவணை முறையில் இசையை அமைத்து, ஒரே மெட்டில் மொத்தப் பாடலையும் முடித்துவிடும் பல இசையமைப்பாளர்களின் பாடல்களையும் "இது என் ஆன்மாவை குடைகிறது" என்று சிலாகிக்கும் ஒரு சிலர் சற்று இவ்வகையான உண்மையான இசையின் பக்கம் ஒதுங்கினால் நலம்.

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன் ,காலை நேர கானங்கள் என்ற வரிசையில் பலரின் நினைவில் தங்கியிருக்கும் முதன்மையான பாடல். ஒரு வைகறை வைரம். பாடலின் துவக்கத்திலேயே அந்தக் காலை நேரம் நம் நெஞ்சத்தில் புலர்ந்துவிடும். சுசீலா தனது மயக்கும் குரலில் பாடலைத் தொடங்கும்போது ஏற்படும் இசை போதை பாடல் முடிந்தும் நீங்காது. மனதுக்குள் அந்தக் குரலும் இசையும் ஒலித்தபடியே இருக்கும். காலையை வரவேற்க இதை விட வேறு என்ன பாடல் இருக்க முடியும் -- அடுத்து வருவதைத் தவிர?

வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன். காலை நேர கானங்கள் என்றால் சில பாடல்களுக்கு அழைப்பிதழே அவசியமில்லாது போய்விடும். நாம் கேட்காமலே அவை நம்மருகே அமர்ந்துவிடும். குறிப்பாக நீ என்ற படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் ஒரு காலை நேரத்து ஏகாந்தம். இரண்டாவது வைகறை வைரம். எம் எஸ் வி தனியாக இசைக்க ஆரம்பித்ததும் அமைத்த முதல் மெட்டு இதுதான் என்று ஒரு தகவல் இருக்கிறது. பொற்கால அறுபதுகளின் அதே இனிமையின் நீட்சியாக ஒலிக்கும் சுகமான காலைத் தென்றல். இதன் இனிமையைத்தான் மறுக்க முடியுமா?

வெள்ளிக் கின்னந்தான் தங்கக் கைகளில் பாடலில் சுசீலாவுக்கு வெறும் ஹம்மிங் மட்டுமே உண்டு. ஒரு முதலிரவுப் பாடலாக ஆரம்பித்து சரணத்தில் தேனிலவு காட்சியாக விரிவடையும். இருந்தும் எந்தவித ஆபாச ஓசைகள், விரகதாப முக்கல்கள் இல்லாமல் மயக்கும் ஹம்மிங் எப்படி சுசீலாவிடமிருந்து வருகிறது பாருங்கள்! டி எம் எஸ் மொத்தப் பாடலையும் அபாரமாக பாடினாலும் சுசீலாவின் ஹம்மிங் அதை அதே அபாரத்துடன் சமன் செய்து வேறு உயரத்திற்கு பாடலை நகர்த்துகிறது.

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு பாடலைக் கேட்டதும் நான் நன்றி சொல்வேன் எம் எஸ் விக்கு என்ற எண்ணம் தோன்றும். லேசாக மேற்கத்திய ரகே இசைச் சாயலோடு பல்லவி நம்மை ஒரு மானசீக ஊஞ்சலில் வைத்து தாலாட்டும். சுசீலாவின் குரல் பனித் துண்டுகளால் நெய்த ஒரு குளிர்த் தென்றலின் சுகமாக இருக்கும். வாத்தியங்களை மீறி ஆனால் வெகு ரம்மிய இசை போல ஒலிக்கும் அவரது குரலில் பாடல் அலுப்பே தராமல் நளினமாக நகர்ந்து செல்லும்.

சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்- சுசீலா தவிர வேறு எந்தக் குரலும் இந்தப் பாடலை இத்தனை தூரம் அழகோடு பாடியிருக்க முடியாது என்று எண்ணக் கூடிய, மெட்டும் இசையும் ஒரே புள்ளியில் கைகோர்த்த அசாதாரணம். வானவில் நம் மீது படர்வது போன்ற இதம் தரும் பாடல். பலவிதமான கற்பனைகளுக்கு சிறகுகள் கொடுக்கும் உன்னதமான இசையின் உள்ளார்ந்த தொடுகை. தூர வைத்துவிட்டு மறந்துபோக முடியாத வசீகரம்.

காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானா கிடார் இசை பாடல் முழுவதும் குழந்தையை அணைத்துக்கொண்டிருக்கும் ஒரு அன்னையின் கரம் போல மென்மையாக அரவணைத்துச் செல்ல, பாடல் தரும் மொத்த இசை அனுபவத்தையும் சுசீலாவின் குரல் தனியே சாதித்துவிடும். இது போன்ற அபாரமான ஒரு மெட்டுடன் ஒரு இனிமையான குரலும் இணைந்தால் அது எட்டும் உயரங்கள் பிரம்மிப்பானவை என்று உணர்த்தும் பாடல்.

சத்திய முத்திரை கட்டளையிட்டது நாயகன் ஏசுவின் வேதம்- கிறிஸ்மஸ் குதூகலம். கேட்டுப் பாருங்கள் எப்படி சுசீலாவின் தெளிவான குரல் இந்தப் பாடலைப் புனிதப்படுத்துகிறது என்று. துள்ளலும் துடிப்புமாக இதயத்தை இன்பமயமாக நிரப்பும் சொர்க்க கானம். கிறிஸ்மஸ் உணர்வை உயிரூட்டி மனதுக்குள் உற்சாகம் பொங்கச் செய்யும் பாடல்.

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பாடலை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். சுசீலா அங்கில்லை. ஆனால் அந்த வசீகர இனிமை சற்றும் குறையாத அனுபவத்தை வாணிஜெயராமினால் கொடுக்க முடிகிறது என்பதன் பின்னே இருக்கும் ஒரே காரணி அந்தப் பாடலின் மெட்டுதான். இதேபோல உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் என்று எஸ் ஜானகி பாடும் போது இதே ஜானகிதானா பின்னாட்களில் வேறு விதமான ஓசைகளை தன் குரலினால் உருவாக்கி, ஒரு மிமிக்ரி பாடகர் போல மாறி "என்ன பாட சொல்லாத நா கண்டபடி பாடிபுடுவேன்" என்ற உண்மையைச் சொல்லி, பலரது அபிமானத்திலிருந்து அகன்று போனார் என்ற வியப்பு ஏற்படும். அத்தனை தூரம் காதலில் உருகிய குரல் கொண்டு பாடுவார். எம் எஸ் வி அமைத்த மெட்டினால் மட்டுமே அது சாத்தியப்பட்டது.

டி எம் எஸ், பி பி ஸ்ரீநிவாஸ், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி, வாணி ஜெயராம், எஸ் பி பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் என பல பாடகர்களின் குரல்கள் இவரது மெட்டுக்குள் புகுந்துகொண்டு அடைந்த கோபுர உச்சங்களும், உயரங்களும் அணிந்துகொண்ட மாலைகளும், மகுடங்களும், மாற்றி எழுத முடியாத நிகழ்ந்த சரித்திரங்கள். யார் அந்த நிலவு போன்றெல்லாம் டி எம் எஸ் பாடுவாரா என்பதே அதுவரை அறியப்படாத ரகசியமாக இருந்தது. இயற்கை என்னும் இளைய கன்னி என்று எஸ் பி பி பாடிய அந்தப் பாடலை விரும்பாத உள்ளங்களே இருக்க முடியாது என்று அப்போது சொல்வார்கள். என்னதான் பெரிய உயரங்களுக்குச் சென்றுவிட்டாலும் தெய்வம் தந்த வீடு பாடல்தான் இன்று வரை பலருக்கு ஜேசுதாசின் முகமாகக் காட்சியளிக்கிறது.

எம் எஸ் வி தனது மெட்டுகளை திடமாக நம்பியவர். மெட்டுக்களால் அவர் தன் பாடல்களை நிரப்பினார். எல்லோரும்தான் இதைச் செய்கிறார்கள் என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். ஆனால் எம் எஸ் வியின் மெட்டுக்கள் ஒரு இசையாகவே உருவாக்கப்பட்டவை. ஒரு பாடலுக்குத் தேவையான இசையின் பங்களிப்பை அவரது மெட்டுக்களே திருப்திகரமாக செய்துவிடும். வாத்தியங்களின் தேவை அதிகமில்லாமலே அவரது பாடல்கள் முழுமை பெற்றதாக இருந்தன. ரோஜா மலரே ராஜ குமாரி, பால் வண்ணம் பருவம் கண்டு, ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, பனியில்லாத மார்கழியா போன்ற பாடல்களின் மெட்டின் அமைப்பே தேவையான இசையை கொடுத்துவிடுகிறது. அதனால்தான் அவரது இசையில் வாத்தியங்கள் அவருக்குப் பின் வந்தவர்கள் அமைத்ததைப் போல தனித்துத் தெரிய வேண்டிய அவசியமில்லாமல் இருந்தன. அவரது வாத்திய இசை துருத்திக்கொண்டு, செயற்கையான அலங்காரத்துடன், தேவையில்லாத ஆர்ப்பாட்டத்துடன் வெளிப்படாமல் பாடலோடு இசைந்து ஒரு முழுமையான பாடல் அனுபவத்தை கேட்பவர்களுக்குக் கொடுத்தது. "பாடல் சுமார்தான். ஆனால் அந்த இடையிசை அபாரம்." போன்ற பாராட்டுக்கள் எம் எஸ் விக்காக தயாரிக்கப்படவில்லை. அவரது பாடல்களில் எல்லா அம்சங்களும் சரியான, நேர்த்தியான விகிதத்தில் பகிரப்பட்டு, உண்மையான இசையினால் படைக்கப்பட்டவை. வெறும் இசைத் துண்டுகளாக அவை அறியப்படவில்லை. குறிப்பாக சங்கே முழங்கு என்ற பாடல் அதன் இசைக்காவும் பெரிய அளவில் புகழ் பெற்றது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும், எங்கே நிம்மதி?, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம், அன்று வந்ததும் அதே நிலா, கண் போன போக்கிலே கால் போகலாமா, அவளுக்கென்ன அழகிய முகம், ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன், என்ன என்ன வார்த்தைகளோ, யார் அந்த நிலவு?, போன்றவை எத்தனை பிரமாண்டமான இசையைக் கொண்டிருந்தன என்பதை ஒரு புதிய தகவலாக தெரிவிக்க வேண்டியதில்லை.

வாத்தியங்கள் ஒரு பாடலுக்கு முக்கியம்தான். ஆனால் பாடலை வாத்தியங்கள் தத்து எடுத்துக்கொண்டால் அந்தப் பாடல் நோய்வாய்ப்பட்டுப் போகிறது. மடிந்தும் போகிறது. நீங்களோ நானோ வெறும் வாத்திய ஓசைகளை நினைவில் வைத்திருந்து ஒரு பாடலை சிலாகிக்கப்போவதில்லை. அவ்வாறன இசையனுபவம் அளிக்கக்கூடிய இசைக்குத் தேவையான மெட்டு வசப்பட்டால் மட்டுமே இங்கே ஒரு பாடல் காலம் தாண்டியும் நினைக்கப்படும். இல்லாவிட்டாலோ மரத்தில் துளிர்க்கும் இலை போலத்தான். கொஞ்ச நாட்கள் பசுமையை அணிந்துகொண்டு பின்னர் சருகாகி விழ வேண்டியதுதான்.

ஒரு பாடலின் ஆன்மா அதன் மெட்டில்தான் இயங்க
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Dec 24, 2015 10:51 pm    Post subject: Reply with quote

இயங்குகிறது என்ற உண்மையை அவர் அறிந்திருந்ததனால்தான் அவரால் இத்தனை உயிர்ப்பான பாடல்களை......ஒரு திருத்தம்...... இத்தனை உயிர்ப்பான பல பாடல்களை .... மற்றொரு திருத்தம்.... இத்தனை உயிர்ப்பான கணக்கிலடங்கா பல பாடல்களைக் கொடுக்க முடிந்தது. அவர் அமைத்த ஏறக்குறைய அனைத்துப் பாடல்களிலும் நீங்கள் இந்த அனுபவத்தை உணரலாம். எனவேதான் அவர் பாடல்கள் ஒலிக்கப்பட்டும், கேட்கப்பட்டும், ரசிக்கப்பட்டும், பாடப்பட்டும், ஓய்ந்துவிடாமல் இன்றளவும் நினைக்கப்பட்டு வருகின்றன. மூன்று நான்கு தலைமுறைகளைத் தாண்டியும் உயிர் வாழ்கின்றன. இன்னும் பல வருடங்கள் எதிர்காலத்துக்குள்ளும் அவர் இசை அதிர்வலைகளை உருவாக்கும்.

எம் எஸ் வி போன்று வசியப்படுத்தும், வலிமை மிகுந்த வசீகர மெட்டுக்களை அமைக்கமுடியாத இசையமைப்பாளர்கள் தஞ்சம் புகுந்த இடம் புதிய வாத்திய ஒலிகள். அவர்களது மிகச் சாதாரணமான, அயர்ச்சியான அலுப்பூட்டும் மெட்டில் இயற்கையாகவே உண்டாகும் விரிசல்களும், உடைசல்களும், இடைவெளிகளும் கிளர்ச்சியூட்டும், தாளமிடவைக்கும் இசை வாத்தியங்களால் நிரப்பப்பட்டு பூர்த்தியாயின. இது தவறா சரியா என்ற விவாதம் அவசியமில்லாதது. அப்படியும் சில பாடல்கள் கேட்கும்படியாக சிறப்பாகவே இருந்தன. ஆனால் இசையின்றி நம்மால் அவ்வாறன பாடல்களை கற்பனை செய்யவே முடியாது. இது ஒரு புதிய பாணியாக அப்போது பரிணாமம் அடைந்தது. எம் எஸ் வி போல ஆழமான ஆத்மார்த்தமாக ஆன்மாவை அணைக்கும் மெட்டுகளை உருவாக்க இயலாத அவர்களது இயலாமை ரசிகர்களின் விமர்சனப் பார்வைக்குள் வராமலிருக்க அவர்களுக்கு பல ஜிகினா வேலைகள் தேவைப்பட்டன. இதனால் ஸ்டீரியோ போனிக் சவுண்ட், ஒரு குரல் மேலே மற்றொரு குரல் படர்வது, ஆர்ப்பாட்டமான அடிதடி தாளம், கேட்கவே சகிக்காத ஊளைகள், முக்கல், முனங்கல்கள், கழுதைகள் கதறுவது, ஆபாசக் கூச்சல்கள், காதல் பாடலில் சம்பந்தம் இல்லாமல் ராக ஆலாபனைகள், விடலைகளின் இச்சைகளை உரசும் ஒலிகள் போன்ற "நவீனங்கள்" தமிழிசைக்கு "கொடையாகக்" கிடைத்தன. பரிதாபம்! இதில் வீழ்ந்துபோன நம் ரசனை மீண்டு எழ நாம் மீண்டும் எம் எஸ் வியிடம் தான் செல்லவேண்டியிருக்கிறது.

கால இயந்திரம் என்ற விஞ்ஞானக் கனவு காகிதத்தில் மட்டுமே சாத்தியமல்ல. இசையும் ஒரு வகையில் கால இயந்திரம்தான். ஒரு பாடல், அல்லது பல்லவி, அல்லது ஒரே ஒரு ஹம்மிங் கேட்கும் அதே கணத்தில் அது நம்மை காலத்தின் பின்னே எங்கோ இழுத்துச் சென்றுவிடுகிறது. திகைப்பான விதத்தில் சில சமயங்களில் நாம் அறிந்தேயிராத உணர்வுகளையும், காட்சிகளையும் அந்த இசை நம் நெஞ்சத்தில் உயிர்ப்பிக்கிறது. இதை நம் கற்பனையின் வளம் என்று தீர்மானித்துக்கொண்டாலும் அந்த கற்பனையின் விசையைத் தட்டிவிடுவது இசைதான். நான் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலை முழுவதும் ஒருசேரக் கேட்டது வெகு சொற்பமான முறைகள் மட்டுமே. காரணம் சுசீலாவின் ஹம்மிங் துவங்கும் போதே மனதில் விரியும் காட்சிகள் என்னை மலைக்க வைக்கும். எனக்குப் பரிச்சயமில்லாத இடங்களும் முகங்களும் மனதில் தோன்ற, சட்டென்று பாடலைவிட்டு நகர்ந்துவிடுவேன். பிறகு மற்றொருநாள் முதல் சரணம் இரண்டாம் சரணம் என்று அந்தப் பாடலை துண்டு துண்டாக ரசிப்பேன். ஒரு முரண்போல அத்தையடி மெத்தையடி பாடலோ என் காலத்துக்கு முந்தைய நான் பார்த்தேயிராத என் குடும்ப நிகழ்வுகளின் மீது ஒரு வசீகர வெளிச்சம் பாய்ச்சும். அந்தக் கற்பனையின் அரவணைப்பில் மனது மழையில் நனைந்த மலர்கள் போல புதிய வாசத்தையும், வண்ணத்தையும் அணிந்துகொள்ளும். என் பெற்றோர்களும், சித்திகளும், மாமாக்களும், சகோதர சகோதரிகளும் எவ்வாறு அந்தப் பாடலை ரசித்திருப்பார்கள் என்ற எண்ணம் என் கற்பனைக்கு வார்த்தைகள் வராத வடிவம் கொடுக்கும்.

சமீபத்தில் ஒரு மதிய வேளையில் ஆட்டோ ஒன்றில் பயனித்துக்கொண்டிருந்தேன். என்னைச் சுற்றிலும் சென்னை பரபரப்பாக துடித்துக்கொண்டிருந்தது. போக்குவரத்து ஓசைகளும், நகரதுக்கேயுரிய இரைச்சல்களும், தனி மனித வசவுகளும், நிறம் நிறமான சினிமா போஸ்டர்களும், மெட்ரோ ரயில் கட்டமைப்புகளுமாக நான் எம் சி சியில் படித்த காலத்து மெட்ராஸ் முகத்தின் சுவடே கொஞ்சமும் தெரியாத வேறு உருவத்துக்கு சென்னை மாறியிருந்தது. அப்போது ஆட்டோ ஓட்டுனரின் அலைபேசியிலிருந்து செந்தமிழ் தேன்மொழியாள் என்று டி ஆர் மகாலிங்கம் பாட ஆரம்பித்தார். அலைபாய்ந்த மனது சற்று நிதானமடைந்து பாடலைப் பற்றிக்கொள்ள ஆரம்பித்தது. காலம் இடம் தெரியாத எதோ இனம் புரியாத எண்ணங்கள் என்னைச் சூழ்ந்தன. பாடல் உள்ளே செல்லச் செல்ல ஒரு திடீர் கணத்தில் நான் அந்தப் பாடலின் பின்னே சென்றுகொண்டிருந்தேன். ஒரே நொடியில் நான் நம் தமிழ்ச் சமூகத்தின் வேர்களுக்குள் புதைந்து போனேன். நம்முடைய மரபு சார்ந்த ரசனைகளும், பாரம்பரிய தொடர்புகளும், அதன் நீட்சியாக நம் வாழ்வின் அன்றாட இயக்கங்களோடு இணைந்துகொண்ட இசையும், நானும் ஒரே புள்ளியில் இணைந்தோம். கால இயந்திரம்!

இன்று பழமையை நாம் ஏறக்குறைய இழந்து விட்டோம். அதைப் பற்றிய அக்கறை பொதுவாக நம்மிடமில்லை. நமது கட்டிடங்கள் தூண்களையும், தாழ்வாரங்களையும் துறந்துவிட்டன. சாலைகள் மீது விஞ்ஞானம் அசுர வேகத்தில் பயணிக்கிறது. தலைக்கு மேலே ரயில் பறக்கிறது. கடைத் தெருக்கள் ஒரே குடையின் கீழே குவிந்துவிட்டன. முறுக்கு, தேன்மிட்டாய், கடலை மிட்டாய், கலர் பானங்கள் போன்ற பழைய சினிமா அடையாளங்கள் பெரிய காகிதப்பை பாப்கார்னிலும், குளிர் கொண்ட பெப்சி,கோக் பாட்டில்களிலும் கரைந்துபோய்விட்டன. நமது சமூக விழுமியங்களும், அடையாளங்களும் கொண்டாட்டமான திருவிழாக்களிலும், புகைப்பட தொகுப்புக்களிலும், அரிதான சில குடும்ப நிகழ்வுகளிலுமே எஞ்சியிருக்கின்றன. நமது விரைவு வாழ்க்கை நம்மை திரும்பிப் பார்க்க விடாமல் செய்துவிட்டது. இந்த ராட்சதப் பாய்ச்சலில் நமது வேர்களோடு நம்மை இணைக்க நம்மிடமிருக்கும் ஒரே பாலம் இசை ஒன்றுதான். அந்த ஆட்டோவில் நான் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் எதிர்காலத்தில் சென்று என் வீடு அடைந்தேன். ஆனால் அங்கு ஒலித்த அந்தப் பாடலில் அறுபது வருடங்கள் பின்னே பயணித்தேன்.

மனிதனுக்கு முதல் மழை கண்டிப்பாக பெருத்த திகைப்பை கொடுத்திருக்கவேண்டும். புரிந்துகொள்ள முடியாத பயத்தையும், விவரிக்க முடியாத வசீகரத்தையும் தந்திருக்கவேண்டும். ஆனால் இன்றைய விஞ்ஞானம் மழையின் டிஎன்ஏ வைத் தெளிவாக வரைந்து நமக்குப் புரியவைத்துவிட்டது. இயற்கையின் சுழற்சியாகிய மழை எப்போதும் நம்மிடமே இருக்கிறது. அது எப்போதும் தீரப்போவதில்லை.

எம் எஸ் வியின் இசையையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன். எத்தனைப் பாடல்கள் அவரது விரலசைவிலிருந்து வந்த வண்ணமிருந்தன என்ற வியப்பு ஏற்படாமல் அவரைப் பற்றி எழுதுவது கடினம். தீவிரமான சிந்தனையோ, யோசைனையோ இல்லாது நீண்ட மணிநேரங்கள் விரயம் செய்யாமல் நமது நினைவுச் சுவர்களிலிருந்து அவரது ஏராளமான பாடல்களை நாம் அடையாளம் காட்டலாம். கொள்கை, தத்துவம், உறவுகள், காதல், மோகம், தாலாட்டு, பிரிவு, தாய்மை, வீரம், மொழிப்பற்று, ஆன்மிகம், குழந்தைப் பாடல், இளமைச் சீண்டல், தெம்மாங்கு, நவீனம் என பலதரப்பட்ட வகைகளாகப் பகுத்தாலும் எம் எஸ் வி ஏராளமாகவும், தாராளமாகவும் இருக்கிறார்.

அவரது இசை நம் காற்றில் கலந்திருக்கிறது. இலைகள் சலசலக்கும்போது, ஜன்னல்கள் அடித்துக்கொள்ளும்போது, வயல் வெளிப்பயிர்கள் தலையசைக்கும்போது, மரங்கள் சாய்ந்தாடும்போது, அலைகள் கரைகளுக்கு விரையும்போது , மேகங்கள் கும்பல் கும்பலாக இடம்பெயரும்போது நாம் உணரும் காற்றில் அவர் பாடல்கள் ஒரு உயிரலையாகத் தவழ்ந்து நம்மைத் தீண்டிக்கொண்டே இருக்கின்றன. நம்மோடு அவை உறவாடிக்கொண்டே இருக்கின்றன. ----ஒரு மழையைப் போல. ஒரு காற்றைப் போல. அவர் இசை என்றும் ஓயப்போவதில்லை.

ஆம். எம்.எஸ்.வி. ஒரு தீரா இசை.
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Dec 28, 2015 10:30 am    Post subject: Reply with quote

Extraordinary piece of writing. I have found that many of my feelings that I have been unable to express have been brilliantly captured by this writer. My salutations to him.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
jeyaramg1



Joined: 04 Feb 2007
Posts: 20

PostPosted: Thu Jul 21, 2016 5:18 pm    Post subject: Reply with quote

This article is a unique piece of writing. Need multiple readings.
As Rengasamy has put it, this one has captured our feelings very well
as an ordent fan of Shri MSV.

Kudos to the author!!
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group